சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து, குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும் அரியலூர் மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தவெக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அண்மையில் பொறுப்பேற்றுள்ள புதிய மின்சாரத் துறை அமைச்சர், மின்வாரியத்தின் கடன் சுமை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தப்பிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதே சூழலை வைத்துத்தான் கடந்த காலங்களில் திமுக அரசு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியது என்று குறிப்பிட்ட அவர், மக்கள் உங்களுக்கு அதிகாரத்தை (பவரை) தந்துள்ளதால் மின்தடை (பவர் கட்) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசு மின்தட்டுப்பாடு போன்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி, ஒன்றிய அரசின் மின்சாரத் துறை தனியார்மயமாக்கல் கொள்கைக்கு வழிவகுக்க நினைக்கிறதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும், விளக்கங்களை விடுத்து மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்க தவெக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
