முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், ஷரியா சட்டத்தின்படி திருமணத்திற்குப் புறம்பாக உடலுறவு கொண்ட குற்றத்திற்காக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தலா 100 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (மே 21, 2026) அன்று பந்தா ஆச்சே என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, சவுக்கடியின் கடுமையான வலியால் அந்தப் பெண் மேடையிலேயே மயங்கி விழுந்தார். முகம் மற்றும் உடல் முழுவதையும் மூடிய ஆடை அணிந்த ஒரு நபரால் இந்தச் சவுக்கடி வழங்கப்பட்டது.
மயக்கமடைந்த அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆச்சே மாகாணத்தில் சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கமாகும்.
இந்தோனேசியாவில் ஷரியா சட்டம் அமலில் இருக்கும் ஒரே மாகாணம் ஆச்சே ஆகும். இங்குள்ள கடுமையான சட்டங்களின்படி, மது அருந்துதல் மற்றும் விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு 140 சவுக்கடிகள் வரையிலும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு 200 சவுக்கடிகள் அல்லது அதற்கு இணையான அபராதமும் விதிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தங்களின் சொந்த ஷரியா போலீஸ் அதிகாரிகள் தவறு செய்தபோதும் அவர்களுக்கு எந்தவித விலக்கும் அளிக்காமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சவுக்கடிச் சம்பவம் மற்றும் பெண் மயங்கி விழுந்த செய்தி தற்போது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
