ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (21). இவரும் வெங்கட நாராயணா – ரமணா தம்பதியின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 13-ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஆஞ்சநேயலு தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது இரவு 10:30 மணியளவில் வெளியில் சென்றிருந்த இளம்பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர் .அங்கு மகளும் ஆஞ்சநேயலுவும் தனிமையில் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த தாய் ரமணா, கட்டையால் ஆஞ்சநேயலுவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். ஆஞ்சநேயலு திருப்பித் தாக்க முயன்றபோது, கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அவரைச் சரமாரியாகத் தாக்கியதில் ஆஞ்சநேயலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பின்னர் பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்கள் மகளுடன் சேர்ந்து 2 நாட்களாக உடலை வீட்டிலேயே வைத்துள்ளனர். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதவாறு உடலைத் துண்டு துண்டாக வெட்டி, இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு பின்புறமிருந்த பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணற்றில் வீசிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதற்கிடையில், ஆஞ்சநேயலுவைக் காணவில்லை என்று வெங்கட் ராவ் என்பவர் போலீசில் புகார் அளிக்க, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் இளம்பெண்ணின் பெற்றோரைப் பிடித்து விசாரித்தபோது, தங்கள் மகளுடன் தனிமையில் இருந்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்த கொடூர உண்மையை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் தம்பதியர் இருவரையும் அதிரடியாகக் கைது செய்த நிலையில், தற்போது தலைமறைவாக இருக்கும் அந்த இளம்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
