குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் 6 வயது சிறுமி மீது அவரது தாயே கொடூரமாக தாக்கியதாக அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. சிறுமியை உருட்டுக்கட்டையாலும் மின்கம்பியாலும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டதாக கூறப்படுகிறது.

சிறுமி தாக்கப்படுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தலையிட்டு அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து காவல்துறைக்கும் குழந்தைகள் உதவி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். சிறுமியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

 

View this post on Instagram

 

A post shared by Gujarat First (@gujaratfirst)

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தனது தாய் தன்னை தொடர்ந்து தாக்கியதாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. தாயும் சிறுமியை தாக்கியதை விசாரணையின்போது ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி தற்போது குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, அவருக்கு தேவையான பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாய் மீது ஜூனாகத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.