சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயர் மிக வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. மீம்ஸ்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் இளைஞர்களின் குமுறல்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் இயக்கம், தற்போது இணையத்தில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்துள்ளது.
இது ஒரு ஆன்லைன் அரசியல் நையாண்டி குழுவாகும். அமைப்பின் மீதான அதிருப்தி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் விரக்தியடைந்துள்ள இளைஞர்களின் குரலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. “சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல்” என்பதுதான் இந்த அமைப்பின் தாரக மந்திரம்.
இந்த அமைப்பைத் தொடங்கிய 30 வயதான அபிஜீத் திப்கே, “இது வெறும் தற்காலிக ட்ரெண்ட் அல்ல; ஒரு பலமான அமைப்பு. இது வெறும் ட்ரெண்டாக இருந்தால், எங்கள் இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்திருக்க மாட்டார்கள். இன்ஸ்டாகிராமில் எங்கள் பதிவுகள் வெறும் 4 நாட்களில் 50 லட்சம் (5 Million) பார்வைகளைப் பெற்றுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை படித்து வரும் அபிஜீத், கடந்த மே 16 அன்று ‘X’ தளத்தில் இதற்கான கூகுள் படிவத்தைப் பகிர்ந்து இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, இளைஞர்களின் கோபம் இந்த அமைப்பாக மாறியது. பெயர் காரணம் குறித்துப் பேசிய அபிஜீத், “இளைஞர்களின் குரலை ஒடுக்க நினைப்பவர்கள் எங்களை ‘கரப்பான்பூச்சிகள்’ என்று அழைத்தால், அதே அடையாளத்தை நாங்கள் பெருமையோடு ஏற்றுக்கொள்கிறோம். கரப்பான்பூச்சிகள் அழுக்கிலும், அழுகலிலும் பிறக்கின்றன. இந்த சிஸ்டத்தின் அழுகலையும், மக்களின் கோபத்தையும் குறிக்கவே இப்பெயர் சூட்டப்பட்டது என்றார்.
நையாண்டியும் தீவிரமான அரசியல் கோரிக்கைகளும் கலந்த இவர்களது தேர்தல் அறிக்கை பலரையும் கவர்ந்துள்ளது. அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு. கட்சி தாவும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவி வழங்கக் கூடாது. ‘நீட்’ (NEET) தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு போன்றவைகளாகும்.
இந்த அமைப்பில் சேர, ஒருவர் “வேலையில்லாதவராக, சோம்பேறியாக, எப்போதும் ஆன்லைனில் வாழ்பவராக மற்றும் தங்களின் கோபத்தை நாகரீகமான முறையில் நையாண்டியாக வெளிப்படுத்தத் தெரிந்தவராக” இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பியுமான கீர்த்தி ஆசாத் ஆகியோர் இந்த அமைப்போடு சமூக வலைத்தளங்களில் ஜாலியாக உரையாடிய பிறகு இது இன்னும் பிரபலமானது. “இந்த கட்சியில் சேர எனக்கு என்ன தகுதி வேண்டும்?” என கீர்த்தி ஆசாத் கேட்க, அதற்கு அந்தப் பக்கத்திலிருந்து, “1983 உலகக்கோப்பையை வென்றதே உங்களுக்குப் போதுமான தகுதிதான்” என நையாண்டியாகப் பதிலளித்துள்ளனர்.
இந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ ஒரு தற்காலிக இணைய ட்ரெண்டாகவே முடிந்துவிடுமா அல்லது எதிர்காலத்தில் பெரிய அரசியல் இயக்கமாக மாறுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் மீம்ஸ்களும், நையாண்டிகளும் இளைஞர்களின் அரசியல் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய ஆயுதமாக மாறியிருப்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
