தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மாற்றுத்திறனாளிகள் நல சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசிய அதிகாரப்பூர்வ கூட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பத்திரிகையாளர் அக்ஷிதா நந்தகோபால் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில், முதலமைச்சரின் அறைக்குள் நடந்த உரையாடல்கள் மிகத் தெளிவாகக் கேட்பதாகவும், இது போன்ற ரகசியக் கூட்டங்கள் எப்படி வெளியே கசிந்தன என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அரசு அதிகாரிகள்தான் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ ஆகப் பகிர்ந்தார்களா என்ற சந்தேகமும் கிளம்பியது. ஆனால், இந்த வீடியோவை எடுத்தது அரசு அதிகாரி அல்ல என்றும், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சிம்மச்சந்திரன் என்பவர்தான் முதலமைச்சர் விஜய்யிடம் முறையான அனுமதி பெற்று இதனைப் பதிவு செய்தார் என்றும் பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் ஒருபுறம் “முதலமைச்சரை இவ்வளவு எளிதாக அணுக முடிவதும், கூட்டங்களை இப்படிப் பதிவு செய்வதும் அரசின் வெளிப்படைத்தன்மையைக் காட்டுகிறது” எனப் பாராட்டி வரும் நிலையில், மறுபுறம் “அரசு நிர்வாகத்தை இப்படி சமூக வலைத்தள விளம்பரமாக மாற்றுவது சரியல்ல” என விமர்சித்தும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.