தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகங்களை’ தரம் உயர்த்தி மேம்படுத்தப் போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணியின் இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஏழை எளிய மக்களுக்காகத் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் நல்லெண்ண அடிப்படையில் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்;
நல்ல விஷயங்களைப் பாராட்டுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை” என்று பளீச்சென்று கூறினார். மேலும், சினிமா நடிகர்கள் பிற மாநிலங்களில் எளிதில் ஜெயிக்க முடியாத சூழலில், தமிழகத்தில் விஜய் ஒரே தேர்தலில் வென்று வரலாறு படைத்துள்ளார் என்றும், மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் சரவணன் புகழாரம் சூட்டியுள்ளார். அதேசமயம், தான் என்றும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே ஏற்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
