மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தண்ணீர்ப் பேரலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அம்பாஜோகையின் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் அமோல் ஆடே என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான்.
மேலும் கடந்த மே 16 அன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுவனின் கையில் சில சில்லறை காசுகள் இருந்துள்ளன. விளையாட்டின் போக்கில் அவனது கையில் இருந்த காசுகள் அங்கிருந்த தண்ணீர்ப் பேரலுக்குள் விழுந்துவிட்டன.
இதனால் பேரலுக்குள் விழுந்த காசுகளை எடுப்பதற்காக நான்கு வயதேயான ஆதர்ஷ் எட்டிப் பார்த்துள்ளான். ஆனால், பேரலின் உயரம் அதிகமாக இருந்ததால் அவனால் தன் உடலின் சமநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் தலைகீழாக தண்ணீருக்குள் விழுந்துவிட்டான். அந்தச் சமயத்தில் அருகில் யாரும் இல்லாததால், மூச்சுத்திணறி அவன் பேரலினுள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுவனைக் காணாததால் தேடிய பெற்றோர், தண்ணீர்ப் பேரலுக்குள் அவன் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
