தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வுக்குள் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள சூழலில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டமும், அவசர ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்பாராத விதமாக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, கட்சிக்குள் பல்வேறு உட்கட்சிப் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன.
தற்போதைய சூழலில் அ.தி.மு.க. இரண்டு முக்கிய அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும்,
முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன.
இதில் பெரும் திருப்பமாக, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி அரசியல் நகர்வைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக சபாநாயகரிடமும் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் குழப்பமும் நீடித்து வருகிறது.
முன்னதாக, இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் திட்டமிடலில் மாற்றம் செய்யப்பட்டு, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டம் கூட்டப்பட்டது.
தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள கட்சியின் நிறுவனர்களான எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
த.வெ.க. அரசுக்கு சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்க வேண்டும்? உடைந்த அணியைச் சரி செய்வது எப்படி? மற்றும் சட்டப்பேரவையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
