தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்கறிஞர் அருள் துமிலன், முதலமைச்சர் விஜய்க்கு மிக முக்கியமான வேண்டுகோள் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், சமீபத்தில் நடிகர் ரவிமோகன் தனது குழந்தைகளைப் பார்க்க விடவில்லை என்று கண்ணீருடன் அளித்த பேட்டி தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவரைப் போல மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினரால் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல், பொருளாதாரக் கட்டுப்பாடு, சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல் மற்றும் பெற்ற குழந்தையைப் பார்க்கத் தடைவிதிப்பது போன்ற பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கு ஆண்கள் ஆளாகி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளைப் பொருளாதார ரீதியாகப் பராமரிப்பது மட்டுமே தந்தையின் பொறுப்பு” என்று ரவிமோகனின் மனைவி தரப்பு கூறியதற்கு அவர் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரம் குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதில் 38.4 விழுக்காடு தற்கொலைகளுக்குக் குடும்பப் பிரச்சினைகளே முதன்மைக் காரணம் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அகஸ்டின் ஜோசப், சென்னை மணிகண்டன், நெல்லை சுதாகர், தருமபுரி தினேஷ் ஆகியோர் குடும்ப வன்கொடுமை தாளாமல் தற்கொலை செய்துகொண்டதற்குச் சமீபத்திய உதாரணங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பிரிட்டன்,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல இந்தியாவிலேயே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் பெண்களால் வன்முறைக்கு ஆளாகும் ஆண்களின் உயிரைக் காப்பாற்ற மாநில அரசு சார்பில் ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதியை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
