உத்தரபிரதேச மாநிலம் டியோரியா தொகுதி பாஜாக எம்.எல்.ஏ.வான ஷலப் மணி திரிபாதி, நேற்று முன்தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் நெடுஞ்சாலையில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, காட்டுத்தீயாய் பரவியது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடனடியாகச் செயல்பட்ட உத்தரபிரதேச மாநில போலீசார், ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறி பைக்கில் பயணம் செய்த எம்.எல்.ஏ. ஷலப் மணி திரிபாதிக்கு அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.
விஐபி-யாக இருந்தாலும் போக்குவரத்து விதியை மீறியதற்காகப் போலீசார் எடுத்த இந்த உடனடி நடவடிக்கை, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, காவல்துறைக்கு பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
