நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைமலைநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, உண்மைகளைப் பேசாதவர்களை மக்கள் கொண்டாடுவதாகவும், மக்களுக்காக உண்மைகளைப் பேசுபவர்களைத் தூக்கி எறிவதாகவும் அவர் ஆதங்கப்பட்டார்.

மேலும், அதிகாரம் என்பது மிகவும் வலிமையானது என்றாலும் அது யாருக்கும் நிலையானது அல்ல என்று குறிப்பிட்ட அவர், வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெற சில நேரங்களில் நாம் பின்வாங்கிப் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை ‘7 அடி நீளம் தாண்ட 70 அடி பின்னே போக வேண்டும்’ என்ற உதாரணத்தின் மூலம் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய சீமான், எளிதாகக் கிடைக்கும் எந்தவொரு பொருளுக்கும் எப்போதுமே மதிப்பு இருக்காது என்று கூறினார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும் என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்.

தங்கள் கட்சியின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் மக்கள் தங்களைத் தேடி வருவார்கள் என்றும், தங்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது, வெற்றி மட்டும்தான் தங்களின் ஒரே எல்லை என்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசினார்.