நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மற்றும் மக்களின் வாக்குரிமை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வழக்கமான பாணியில் அதிரடியாகவும், ஆவேசமாகவும் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நாம் பேசுகிற மாற்று அரசியல் மக்களுக்குப் போய்ச் சேர்ந்து, அது அவர்களுக்குப் புரிய இன்னும் கால் நூற்றாண்டுக்கு (25 ஆண்டுகள்) மேல் ஆகும் போலிருக்கிறது.
நாம் பேசும் தீவிரமான அரசியல் கருத்துக்கள் அவர்களுக்கு வேடிக்கையாகத் தெரிகிறது; அதே நேரத்தில் மேடைகளில் வேடிக்கை காட்டுபவன்தான் அவர்களுக்குப் பெரிய தலைவனாகத் தெரிகிறான்” என்று தற்போதைய தேர்தல் கள எதார்த்தத்தை மிக ஓப்பனாகச் சாடியுள்ளார். மேலும் தொடர்ந்த சீமான், “மக்களுக்கு இப்போது நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துக்கள் தேவையில்லை, வெறும் கவர்ச்சி மட்டும்தான் தேவைப்படுகிறது.
தங்களுக்கு ஓட்டுக் கேட்க வரும் வேட்பாளர் யார், அவர் மக்களுக்காக என்ன பேசுகிறார், வெற்றி பெற்றால் உருப்படியாக வேலை செய்வாரா என்று எந்த ஒரு அடிப்படை விஷயத்தையும் ஆராயாமல் மக்கள் வாக்களிக்கிறார்கள். கடைசியில் தேர்தல் முடிந்து அவர் வென்ற பிறகுதான், ‘ஓ… இவர்தான் நம்ம தொகுதி வேட்பாளரா’ என்று விளங்கும் அவல நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இருக்கும் மக்களுக்கு மார்க்ஸ், லெனின், அம்பேத்கர், வள்ளுவன் என எந்த ஒரு தத்துவ அறிஞர்களும் தேவையில்லை” என்று ஒட்டுமொத்த வாக்காளர்களின் போக்கையும் நினைத்துத் தனது அக்னிப் பிழம்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
