தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத ஒரு சூழல் நிலவி வருகிறது. இதனால், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரத்திலும், ஊடகங்களிலும் நாளுக்கு நாள் ‘டிசைன் டிசைனாக’ விசித்திரமான கற்பனைச் செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அதிமுக திமுகவின் ஆதரவோடு புதிய அரசு அமைக்கத் திட்டமிட்டு வருவதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.
இது அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இதற்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்கப் போவதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
இந்த விஷமத்தனமான செய்தி உண்மையா என்று நேரில் வந்து என்னிடம் கேட்டவர்களிடம் நான் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கொள்கை ரீதியாக மாறுபட்ட திமுகவும் அதிமுகவும் கைகோர்ப்பதற்கு எள்ளளவும் வாய்ப்பே இல்லை என்பதை மக்களும், அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களான கட்சி நிர்வாகிகளும் உறுதியாக நம்புவதாகவும் தனது அறிக்கையில் இபிஎஸ் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
