சவுதி அரேபிய கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவம், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழக மீனவர் சங்கர், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​முன்னதாக, சவுதி அரேபிய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரெனப் படகில் வந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தோட்டாக்கள் துளைத்துச் சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்தார்.

​அதே தாக்குதலில் பலத்த காயமடைந்த மற்றொரு தமிழக மீனவரான சங்கர், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாகச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

​சீர்காழி மாவீரனைத் தொடர்ந்து தற்போது சங்கரும் உயிரிழந்ததை அடுத்து, ஈரானியக் கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் பலியான தமிழக மீனவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. சவுதி கடலில் தொடர்ச்சியாக நடக்கும் இந்த இரத்தக்களறி மற்றும் கொள்ளையர்களின் வெறியாட்டத்தால், கடல் தொழிலை நம்பியிருக்கும் தமிழக மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டுமெனக் கொந்தளித்து வருகின்றன.