கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்து வந்தனர். இந்நிலையில், அங்குள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தைப் பராமரிப்பு தொடர்பாக 31 விதிகள் கொண்ட புதிய குடும்பச் சட்டம் ஒன்றை தாலிபான் அரசு கொண்டு வந்துள்ளது.
இதில் மிகச் சர்ச்சைக்குரிய விதியாக, திருமணம் செய்யவிருக்கும் ஒருகன்னிப் பெண்’ சம்மதம் கேட்கப்படும்போது அவர் அமைதியாகவோ அல்லது மௌனமாகவோ இருந்தால், அது திருமணத்திற்கான சம்மதமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, பெண்கள் ‘வேண்டாம்’ என்று வெளிப்படையாக மறுக்காத பட்சத்தில், அவர்கள் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவே கருதப்படுவார்கள் என்ற இந்த விதி சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் புதிய சட்டத்தின் மூலம் மைனர் குழந்தைகள் திருமணங்களுக்குத் தாலிபான் அரசு அதிகாரப்பூர்வமாகச் சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது.
இதற்கான முழு அதிகாரமும் அந்தப் பிள்ளைகளின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மணமகன் சமூக ரீதியாகத் தகுதியானவராகவும், மதக் கோட்பாடுகளின்படி வரதட்சணை சரியாக இருக்கும் பட்சத்திலும் இந்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ‘கியார் அல்-புலூக்’ என்ற சட்டக் கோட்பாட்டின்படி, சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள்பருவமடைந்த பிறகு தாலிபான் நீதிமன்ற உத்தரவு மூலம் அதை ரத்து செய்து கொள்ளலாம் என்றும், கணவன் அல்லது மனைவி கொடுமைக்காரர்களாகவோ அல்லது மனநலம் குன்றியவர்களாகவோ இருப்பது நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கவோ, தண்டனை விதிக்கவோ நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
