டெல்லியில் நடைபெற்ற முக்கிய ராணுவக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவரிடம், “முன்பு எல்லையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மீண்டும் ஒரு சூழல் உருவானால், அதனை இந்திய ராணுவம் எப்படி எதிர்கொள்ளும்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ராணுவத் தளபதி, “இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டினால், உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் துடைத்து எறியப்படும்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் அண்டை நாட்டுக்கு‌ நேரடி எச்சரிக்கை விடுத்தார். இந்த அதிரடிப் பேச்சு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய ராணுவத் தளபதியின் இந்த எச்சரிக்கைக்குப் பாகிஸ்தான் ராணுவம் தற்போது தங்களின் கடுமையான கண்டனத்தையும் விமரிசனத்தையும் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், “இறையாண்மை கொண்ட ஓர் அண்டை நாட்டைப் பார்த்து இப்படி அச்சுறுத்துவது, அறிவாற்றல் இல்லாத முதிர்ச்சியற்ற நிலையை மட்டுமே குறிக்கிறது; பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு,அதனுடன் அமைதியாக இணைந்து வாழ இந்தியா பழகிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானை எப்போதும் இலக்காகக் குறிவைக்கும் இந்தியாவின் இந்த யுக்தி ஏற்புடையதல்ல என்றும், போரை நோக்கிய இந்தியாவின் இத்தகைய முயற்சிகள் இரு நாடுகளுக்கும் பேரழிவை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது.