ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் துறை மீதான பொருளாதாரத் தடைகளை தற்காலிகமாகத் தளர்த்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இறுதி ஒப்பந்தத்தில் அனைத்து தடைகளும் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ள நிலையில், நிரந்தர உடன்பாடு எட்டப்படும் வரை தற்காலிக விலக்குகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

இந்தச் சூழலில், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் 14 அம்சங்கள் அடங்கிய புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் ஈரான் சமர்ப்பித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் வேளையில், மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புயல் மற்றும் மின்னலுக்கு நடுவே அமெரிக்க கடற்படை கப்பலில் டிரம்ப் நிற்பது போன்றும், அதன் பின்னணியில் ஈரான் கப்பல்கள் இருப்பது போன்றும் உள்ள அந்தப் படம், ஈரானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான அவசரகால திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.