திரிபுரா மாநிலம் அகர்தலாவில், சமூக வலைதளமான முகநூல் மூலம் பழகிய பழங்குடியின இளம் பெண் ஒருவருக்கு விலை உயர்ந்த ஐபோன் பரிசாகத் தருவதாக ஆசை காட்டி, ஓட்டல் அறைக்கு கடத்திச் சென்று வன்கொடுமை செய்த பிரபல சோசியல் மீடியா கிரியேட்டரும், மொபைல் கடை உரிமையாளருமான நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். த அந்த நபருடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூல் வழியாகப் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தீவிரமாகப் பேசி வந்துள்ளனர் என்று காவல் துறை அதிகாரி பரிதோஷ் தாஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி, அந்த நபர் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும், அங்கு வைத்து விலை உயர்ந்த ஐபோன் ஒன்றை வாங்கித் தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார். இந்த சூழலில், சனிக்கிழமை காலை மருந்து வாங்குவதற்காக அந்தப் பெண் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு அதிநவீன சொகுசு பைக்கில் வந்திறங்கிய அந்த நபர், முதலில் சொன்ன இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், இரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால், அவரை மிருகத்தனமாகத் தாக்கியதோடு, அவரிடமிருந்த மொபைல் போனைப் பறித்துக் கொண்டு, வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

எப்படியோ அந்த ஓட்டல் அறையிலிருந்து தப்பித்த அந்தப் பெண்,காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். உடனடியாக போலீசார் அவனது மொபைல் கடைக்குச் சென்று அதிரடியாக அவனைக் கைது செய்தனர். திருமணமானவரான அந்த நபருக்குக் குழந்தைகளும் உள்ள நிலையில், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதும், தனது அரசியல் செல்வாக்கையும் தொடர்புகளையும் காட்டி போலீசாரையே மிரட்ட முயன்றுள்ளார். எனினும், அதற்குப் பணியாத போலீசார், அவரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் முறைப்படி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.