உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள கோமதிநகர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சாப்ராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் கோமதிநகர் ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ஸ்லீப்பர் பெட்டியில் யாருமற்ற நிலையில் ஒரு பெரிய இரும்புப் பெட்டி கிடப்பதைக் கண்ட ரயில்வே ஊழியர்கள், உடனடியாக இதுகுறித்து  ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், சந்தேகத்திற்கிடமான அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தப் பெட்டிக்குள் சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் மட்டுமே தலை இல்லாமல் இருந்தது. கொடூரமான முறையில் அந்தப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டிருந்ததோடு, அவரது கை மற்றும் கால்கள் தனியாக வெட்டப்பட்டு பாலிதீன் கவரில் பேக் செய்யப்பட்டுக் கிடந்தன. அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், உடனடியாக அதைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மிகக் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அந்தப் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வண்ணமயமான கிராமப்புற ஆடைகளை அணிந்திருந்ததால், அவர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சாப்ராவில் இருந்து கோமதிநகர் வரை இந்த ரயில் சுமார் 12 மணி நேரம் பயணித்து, இடையில் 20 ரயில் நிலையங்களைக் கடந்து வந்துள்ளது. இதனால், எந்த ரயில் நிலையத்தில் கொலையாளிகள் இந்த மர்மப் பெட்டியுடன் ரயிலில் ஏறினார்கள் என்பதைக் கண்டறிய, இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து 20 ரயில் நிலையங்களின் சிசிடிவி (CCTV) காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் தலைமையக உயர் அதிகாரிகள் வரை அனைவரும் இந்த வழக்கில் கவனம் செலுத்தி வருவதால், ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரிய கேள்வி எழுந்துள்ளது.