கடந்த மே 15, 2026 அன்று வெளியான பிரபல நாளிதழ் ஒன்றின் முதல் பக்க செய்தியில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை வெறும் “விஜய்” என்று மட்டும் குறிப்பிட்டு தலைப்பு வெளியிட்டதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கோபமும் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி 17-வது வார்டு மேலவை பிரதிநிதி எத்திஷ், சம்பந்தப்பட்ட நாளிதழ் நிர்வாகத்திற்கு முதலில் மின்னஞ்சல் மூலம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதற்கு எந்தப் பதிலும் வராததால், நேரடியாகத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நாளிதழ் தரப்பிடம் தனது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

​”கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று தமிழக முதலமைச்சராக இருக்கும் ஒரு தலைவரை, குறைந்தபட்ச மரியாதை மற்றும் பத்திரிகை நெறிமுறையின்றி வெறும் ‘விஜய்’ என்று குறிப்பிடுவது அவமரியாதையாகத் தெரிகிறது; அவர் உங்கள் வீட்டுப் பணியாளர் அல்ல” என்று எத்திஷ் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். மேலும், இனிமேல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்’ போன்ற மரியாதையான குறிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தவெக நிர்வாகியின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளித்த நாளிதழ் தரப்பு, இனி இந்தத் தவறு நடக்காது என்று உறுதியளித்துள்ள நிலையில், இது தொடர்பான ஆடியோ காணொளி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.