சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த குர்கானைச் சேர்ந்த குர்ஜோத் அலுவாலியா என்பவர், தனது சக பயணி ஒருவரின் நடவடிக்கையால் டென்ஷனான சம்பவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த நபர், கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது தனிப்பட்ட இடத்திற்குள் (Personal Space) நுழைவதாகக் கூறி குர்ஜோத் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

“கடந்த 30 நிமிடங்களாக இந்த அறிவுஜீவி எனது இடத்திற்குள் கால் நீட்டி அமர்ந்துள்ளார். இந்தியாவில் உள்ள இத்தகைய படித்த முட்டாள்களின் நாகரீகமற்ற செயலை எப்படித் தீர்ப்பது?” என ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

அந்த நபரின் அழுக்கு ஷூக்கள் தன் மீது பட்டால் பொறுமை இழந்துவிடுவேன் என்றும் அவர் எச்சரித்திருந்தார். பின்னர் உணவு பரிமாறப்பட்ட பிறகு அந்த நபர் சரியாக அமர்ந்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் இரண்டாகப் பிரிந்துள்ளனர். “பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடாது” என ஒரு தரப்பினரும், “இதை அவரிடமே நேரடியாகச் சொல்லிச் சரி செய்திருக்கலாமே, எதற்கு சோஷியல் மீடியாவில் பதிவிட வேண்டும்?” என மறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.