வேலை தேடி அலைந்த இளைஞர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அமேதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசாபிர்கானா பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர குமார் யாதவ் என்ற இளைஞருக்கு, பள்ளிக்கூட இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அமித் திவேதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
“10 லட்சம் கொடுத்தால் உதவி ஆசிரியர் வேலை வாங்கித் தருவேன்” என ஆசை காட்டிய அந்த நபர், தர்மேந்திராவை நம்ப வைக்க போலியான பணி நியமன ஆணை (Appointment Letter) மற்றும் சம்பளச் சான்றிதழை வழங்கியுள்ளார்.
அந்த போலி ஆவணங்களை உண்மை என்று நம்பிய தர்மேந்திரா, அதை வங்கியில் சமர்ப்பித்து 10 லட்சம் ரூபாய் லோன் எடுத்துள்ளார். லோன் பணம் வந்தவுடன் அதில் 8 லட்சத்தை அமித் திவேதியின் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
ஆனால், உற்சாகத்துடன் வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதும், தான் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தர்மேந்திராவிற்குத் தெரியவந்தது. தற்போது புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
