மத்தியப்பிரதேச மாநிலம் டாட்டியா மாவட்டத்தில், தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக காதலன் மிரட்டியதால், 26 வயதுடைய பி.எச்.டி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குவாலியரில் படித்து வந்த அந்தப் பெண், தனது தம்பியின் அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்துள்ள ஒரு பக்க கடிதத்தில், தனது காதலனான யோகேஷ் ராவத் மற்றும் அவனது சகோதரிகளான பூனம், பிரியங்கா ஆகிய மூவருமே தனது மரணத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தன்னைத் தொடர்ந்து மிரட்டி, மனரீதியாக துன்புறுத்தி, பிளாக்மெயில் செய்ததாக அந்தப் பெண் மரண வாக்குமூலமாக அதில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையினரிடம் அளித்த புகாரின்படி, யோகேஷ் அந்தப் பெண்ணை உணவகத்திற்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதனை ஆபாச புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து வைத்துள்ளான்.
இதனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரிட்டது. அதன் பின்னர் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, காதலன் யோகேஷ் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளான்.
