அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். முன்னதாக, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என எதிரணியில் உள்ள எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதுமட்டுமன்றி, பொதுக்குழுவைக் கூட்டுவதற்காகப் பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்ட வாரியாகச் சந்தித்து, அவர்களிடம் கையெழுத்து பெறும் பணிகளிலும் வேலுமணிஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உட்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தை அறிந்த எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவைக் கூட்டக் கோரி யாராவது வந்தால் எவ்விதக் கையெழுத்தும் போட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்கள், நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் பெயரைப் பயன்படுத்தி யாராவது கையெழுத்து கேட்டாலும் நம்பி ஏமாற வேண்டாம் என ஏற்கனவே கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எச்சரித்திருந்ததை இக்கூட்டத்தில் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே எழுந்துள்ள இந்த விசுவாசக் கையெழுத்துப் போராட்டம் தமிழக அரசியலில் திக் திக் நிமிடங்களை ஏற்படுத்தியுள்ளது.
