சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நேரக்கட்டுப்பாடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சென்னையில் உள்ள சாதாரண டாஸ்மாக் கடைகள் (TASMAC & ELITE) அனைத்தும் இரவு 10:00 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். அதேபோல், மதுபானக் கூடங்கள் (Bars) மற்றும் கிளப்புகளில் உள்ள மது விற்பனை மையங்கள் முறையே இரவு 10:00 மற்றும் 12:00 மணிக்குள் மூடப்படுவதைக் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த நேரக்கட்டுப்பாட்டை ரோந்து வாகன அதிகாரிகள் மற்றும் பீட் அதிகாரிகள் (Beat Officers) தீவிரமாகக் கண்காணித்து, கடைகள் மூடப்பட்டதற்கான புகைப்படங்களை உடனுக்குடன் அதிகாரப்பூர்வ குழுக்களில் பதிவிட வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது விற்பனை செய்வதோ அல்லது சில்லறை விற்பனை (Loose Selling) செய்வதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ரவுடிகளைக் கண்காணிக்கவும், போக்சோ (POCSO) மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/ST) வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களை அலைக்கழிக்காமல் புகார்களை உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.