தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக நான் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் வதந்தியானவை” என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் திமுக – அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக ரஜினிகாந்த் தான் தூது சென்று பேசினார் என்று சமூக வலைதளங்களில் பெரிய அளவில் செய்திகள் பரவின.

இந்நிலையில், இத்தகைய வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் ஸ்டாலின் சாரை நேரில் சந்தித்தது உண்மைதான். ஆனால், எங்கள் சந்திப்புக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை. ஸ்டாலின் சார் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர். எங்களின் நட்பு மற்றும் கொள்கை என்பது எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டது.

முதலமைச்சர் விஜய்க்கும் எனக்கும் இடையில் ‘ஜெனரேஷன் கேப்’ உள்ளது. எனக்கும் அவருக்கும் சுமார் 25 வயது வித்தியாசம் இருக்கிறது. சிறு வயது முதலே நான் அவரைப் பார்த்து வருகிறேன். தற்போது அவர் மக்கள் ஆதரவோடு முதலமைச்சராகியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை விஜய் நிச்சயம் பூர்த்தி செய்வார் என்று நான் நம்புகிறேன்.

நடிகர் சங்கம், கமல் உள்ளிட்ட திரைத்துறைப் பிரபலங்கள் பலரும் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், சும்மா சம்பிரதாயத்திற்காகப் போய் ஒருவரைப் பார்ப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. மக்கள் புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, முதலமைச்சர் விஜய்க்கு அவரது நிர்வாகச் செயல்பாடுகளைத் தொந்தரவின்றி மேற்கொள்ள இன்னும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும்   நான் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக 100% வெற்றி பெற்று இருப்பேன் அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

ஆனால் நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கான காரணத்தை ஏற்கனவே மூன்று பக்க அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டேன். அதற்குப் பிறகும் தேவையில்லாத வதந்திகளைப் பரப்புவது சரியல்ல” என்று ரஜினிகாந்த் மிகவும் நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் பதிலளித்தார். இதன் மூலம் கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.