தமிழகத்தில் இன்னும் 4 மாதங்கள்தான் இந்த ஆட்சி இருக்கும். அடுத்த 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பரபரப்பாகப் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகன் 66,851 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியைச் சிங்கப்பூர் போன்று மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள். வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவுக்கு அடித்து விரட்டுவோம். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அடுத்த 4 முதல் 6 மாதங்களில் அவர்தான் அடுத்த முதலமைச்சர்.
பெண்கள் எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுப்போம் எனச் சொல்கிறாரே முதலமைச்சர் விஜய், அவர் தனது மனைவிக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது அவரது பதவியேற்பு விழாவிற்கு அவரது மனைவி, மகள் வந்தனரா? இப்படிப்பட்டவர் தமிழக முதலமைச்சராக வந்துள்ளார் என்றால் தமிழகம் கெட்டுவிட்டது, அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்றார்.
