கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி கோவையில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.
தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மகளைப் பார்ப்பதற்காகக் கோவை வந்த தாய், சிறுமியைத் தன்னுடன் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகு சிறுமி மிகவும் சோர்வாகவும், அச்சத்துடனும் இருப்பதை அவரது தாய்கவனித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்து சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரது உடலில் மறைவான இடங்களில் காயங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மகளிடம் தாய் மெதுவாக விசாரித்தபோது, பள்ளி முடிந்ததும் வேனில் தான் முதலில் வந்து அமரும் நேரத்தைப் பயன்படுத்தி, வேன் டிரைவர் தனக்குச் சாக்லேட் கொடுத்துப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகமிரட்டியதையும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் பேரதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக கோவை மாநகர கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிஞ்சுச் சிறுமிக்குக் கொடூரமான பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி வேன் டிரைவரான கணேசன் (43) என்பவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
