தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நடத்தும் விதம் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆவணப் பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் போன்ற பல்வேறு சேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளைச் சார் பதிவாளரிடமோ அல்லது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமோ சமர்ப்பிக்க வரும்போது, ஒவ்வொரு அலுவலரின் மேஜைக்கு முன்னாலும் பொதுமக்களுக்காகக் குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர்களை நல்முறையில் நாற்காலியில் உட்கார வைத்துதான் பேச வேண்டும் என்றும் அந்த உத்தரவில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பொதுமக்கள் எவரையும் நிற்க வைத்துக்கொண்டு அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என்றும், அவ்வாறு விதிகளை மீறி பொதுமக்களை நிற்க வைக்கும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாகப் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும்போது பல அலுவலகங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால், இனிவரும் காலங்களில் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் மூலம் சார் பதிவாளர் அலுவலகங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் தமிழக அரசுப் பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
