அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஏற்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய விதிமுறை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸின் கடைசி பந்தில் விஷ்ணு வினோத் விக்கெட் காப்பாளர் பும்ராவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார்.

இருப்பினும், டிஆர்எஸ்  முறையீட்டின் மூலம் அந்தத் தீர்ப்பு தவறானது என்று நிரூபிக்கப்பட்டு விஷ்ணு வினோத் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடுவர் முதலில் ‘அவுட்’ கொடுத்த காரணத்தால் அந்தப் பந்து ‘டெட் பால்’ எனக் கருதப்பட்டது. இதனால் அந்தப் பந்தில் பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்த ஒரு ஓட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த ஒரு ஓட்டம் பஞ்சாப் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்ட அவர், ஒரு தவறான தீர்ப்பால் பஞ்சாப் அணிக்கு கிடைக்க வேண்டிய ஒரு ஓட்டம் பறிபோய்விட்டது என்றும், இந்த விதியை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரில் ‘இம்பாக்ட் பிளேயர்’ போன்ற புதிய விதிகள் கொண்டு வரப்படுவது போல, டிஆர்எஸ் முடிவுகள் மாற்றப்படும்போது அந்தப் பந்தில் எடுக்கப்படும் ஓட்டங்களையும் கணக்கில் சேர்க்கும் வகையில் விதிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.