மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் மீரட் கொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான கொலை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனை கொடூரமான முறையில் கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைத்து வைத்துள்ளார். அந்த வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம் காரணமாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டபோது, டிரம்முக்குள் அழுகிய நிலையில் இருந்த ஆணின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கள்ளத்தொடர்பு மற்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் மும்ப்ரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியான பெண்ணை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீரட்டில் நடந்த பிரபல கொலை வழக்கைப் போலவே, உடலை மறைக்க இந்த பெண் கையாண்ட விதம் இருப்பதால், இது ‘மீரட் கொலை சம்பவத்தின் மறுபதிப்பு’ என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கொலையில் அந்த பெண்ணுக்கு வேறு யாரேனும் உதவினார்களா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
