சத்தீஸ்கர் மாநிலத்தில் உயிரிழந்த மகனின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு எடுத்து வரவும் அரசு வாகனம் கிடைக்காததால், ஆட்டோவின் கால்மிதி பகுதியில் மகனின் சடலத்தை வைத்துத் தந்தை அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது

அதாவது விசேஷ்ரா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். முறையான விழிப்புணர்வு மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமத்திற்கு மாந்திரீகம் செய்ய அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த மகனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக 20 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதற்காக ஆம்புலன்ஸ் அல்லது சடலங்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை தந்தை பலமுறை கோரியும், நிர்வாகத் தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

வேறு வழியின்றி, அந்தப் ஏழைத் தந்தை ரூ.2,000 வாடகைக்கு ஒரு ஆட்டோவைத் தேடிப் பிடித்துள்ளார். ஆட்டோவிற்குள் சடலத்தை வைக்க போதிய இடவசதி இல்லாததால், மகனின் உடலை ஆட்டோவின் கால்மிதியில் வைத்து, கீழே விழுந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு கண்ணீருடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னராவது அரசு வாகனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அந்தத் தந்தைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மருத்துவமனை நிர்வாகம் எவ்வித ஏற்பாட்டையும் செய்து தரவில்லை. இறுதியில், அதே ஆட்டோவில் மகனின் சடலத்தை கால்மிதியிலேயே வைத்துக்கொண்டு மேலும் 15 கி.மீ பயணித்து கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். வழியெங்கும் மகனின் உடல் ஆட்டோவிற்கு வெளியே தொங்கியபடி சென்ற காட்சியைக் கண்ட பொதுமக்கள் கலங்கிப் போயினர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி ராமேஷ்வர் சர்மா இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 1099 சேவை மாவட்டப் பொறுப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “அரசு இலவச ஆம்புலன்ஸ் திட்டங்களை அறிவித்தாலும், கடைக்கோடி கிராமத்தில் உள்ள ஏழைப் பழங்குடியின மக்களுக்கு அது எட்டாக்கனியாகவே உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி” என உள்ளூர் மக்கள் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.