பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், 60 வயது முதியவருக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற வினோதமான காதல் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மணிகாரி பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுக்ரிம் பாஸ்வான் என்பவருக்கும், அண்டை கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது.
மேலும் சுமார் 38 வயது வித்தியாசம் இருந்தபோதிலும், இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், கிராம மக்கள் அவர்களைத் தனிமையில் ஒன்றாகப் பிடித்துள்ளனர். இதனையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், சேர்ந்து வாழ விரும்புவதாகவும் உறுதியாகக் கூறினர்.
இதனால் இருவரின் விருப்பத்தையும் ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், அவர்கள் இருவரையும் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். அந்தப் பெண் தனது விருப்பப்படியே இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதாகவும், இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கோயிலில் நடைபெற்ற இந்தத் திருமணச் சடங்குகள் மற்றும் அப்பெண் அந்த முதியவருக்கு மாலை அணிவித்து, அவர் நெற்றியில் குங்குமம் வைக்கும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. “காதலுக்குக் கண் இல்லை, வயது ஒரு தடையல்ல” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
