மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையில் கட்டி அணைக்கட்டில் வீசிய கணவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது லக்னோவை சேர்ந்தவர் அல்தாப் (எ) கல்லு (25). இவரது மனைவி யாஸ்மீன் (24). யாஸ்மீனுக்கு அவரது நெருங்கிய உறவினர் ஒருவருடன் பழக்கம் இருப்பதாக அல்தாப் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அல்தாப் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
கொலை செய்த பின், சடலத்தை ஒரு கோணிப்பையில் மறைத்து வைத்த அல்தாப், பேட்டரி ரிக்ஷா மூலம் பாராபங்கி பகுதிக்குக் கொண்டு சென்றார். அங்குள்ள இந்திரா அணைக்கட்டின் ஓரத்தில் சடலத்தை வீசிவிட்டு தப்பியோடினார். மறுநாள் காலையில் ஒன்றுமே தெரியாதது போல் காவல் நிலையத்திற்குச் சென்ற அல்தாப், தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
அல்தாப்பின் பேச்சில் இருந்த முரண்பாடுகளும், அவரது பதற்றமான நடவடிக்கைகளும் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. போலீஸார் அவரிடம் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தியபோது, அல்தாப் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார். அல்தாப் அடையாளம் காட்டிய இடத்திற்கு விரைந்த போலீஸார், அணைக்கட்டு ஓரத்தில் கிடந்த யாஸ்மீனின் சடலத்தை மீட்டனர். தற்போது அல்தாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
