தமிழகத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய நடைமுறை கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் கையெழுத்திட்ட திட்டத்தின்படி, வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இந்த 200 யூனிட் இலவசச் சலுகை பொருந்தும்.

இதற்கான புதிய கட்டண விவரப் பட்டியலையும் மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, உங்கள் வீட்டு மின்சாரப் பயன்பாடு 200 யூனிட்டிற்குள் இருந்தால் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை; பில் ‘பூஜ்ஜியம்’ (0) ரூபாயாக வரும். இந்த அதிரடி மாற்றத்தால் ஒவ்வொரு தகுதியான குடும்பத்திற்கும் மின் கட்டணத்தில் நேரடியாக 235 ரூபாய் வரை மிச்சமாகும்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு முதல் 200 யூனிட்டிற்கான கட்டண விலக்கு அளிக்கப்பட்டு, மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, கடந்த காலங்களில் 210 யூனிட்டிற்கு 282 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 47 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.

அதேபோல், 300 யூனிட் ஓடியிருந்தால் 705 ரூபாய்க்குப் பதிலாக 470 ரூபாயும், 500 யூனிட் ஓடியிருந்தால் 1,805 ரூபாய்க்குப் பதிலாக 1,570 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால், மின்சாரப் பயன்பாடு 500 யூனிட்டைத் தாண்டினால் இந்தக் கட்டணக் குறைப்பு சலுகை பொருந்தாது; அவர்கள் பழைய நடைமுறைப்படியே (100 யூனிட் இலவசம்) முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.