வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தனது நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில், நண்பன் மீதே காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோலார்பேட்டை ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). இவருக்கும் சிவரஞ்சனி என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26) என்பவர் திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். ஜெயக்குமாரும் அஜித்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

நண்பர் என்ற முறையில் ஜெயக்குமார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த அஜித்குமாருக்கும், ஜெயக்குமாரின் மனைவி சிவரஞ்சனிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாகத் திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஜெயக்குமாருக்குத் தெரியவரவே, குடும்பத்தில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் இருவரும் தொடர்பைத் தொடர்ந்ததுடன், சிவரஞ்சனியுடனான தனது அந்தரங்க உறவை அஜித்குமார் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயக்குமார், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு  நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், நேற்று முன்தினம் ஜெயக்குமார் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, தனது காரால் அவர் மீது மோதி கொலை செய்ய முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றது. “உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்” என அஜித்குமார் மிரட்டியதைத் தொடர்ந்து, ஜெயக்குமார் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அஜித்குமாரை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். தனது சொந்த மனைவி கர்ப்பமாக இருக்கும் சூழலில், நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்டு நண்பரையே கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.