தூத்துக்குடியில் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரின் மகள், கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கட்டிடக் காண்டிராக்டர் மற்றும் அவரது மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை. இவரது மகள் பிருந்தா தேவி (32). இவரது கணவர் கிருஷ்ண குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பிருந்தா தேவி தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற பிருந்தா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பிருந்தா தேவி பக்கத்து வீடான கட்டிடக் காண்டிராக்டர் மாரிமுத்துவின் வீட்டுக்குள் செல்வதும், அதன் பிறகு வெளியே வராததும் உறுதி செய்யப்பட்டது.
மாரிமுத்துவுக்கும் பிருந்தா தேவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாரிமுத்துவுடன் பிருந்தா தேவி தனிமையில் இருந்தபோது, அங்கு வந்த மாரிமுத்துவின் மனைவி சரவணப் பிரியா (34) ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மோதல் முற்றவே, சரவணப் பிரியா பிருந்தா தேவியைத் தள்ளிவிட்டு, தலையணையால் முகத்தை அமுக்கிக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர், தனது கணவர் மாரிமுத்து மற்றும் தம்பி கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தங்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் உடலைப் புதைத்து மறைத்துள்ளனர்.
போலீசார் மாரிமுத்துவைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் உடலைப் புதைத்த இடத்தை மறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடினார். போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கவே, சரியான இடத்தை அடையாளம் காட்டினார். நேற்று இரவு நேரமாகிவிட்டதால், இன்று காலை தாசில்தார் முன்னிலையில் பிருந்தா தேவியின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மாரிமுத்துவின் தம்பி கார்த்திக்கைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
