பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக ‘தங்கச் செயின்’ கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சஞ்சு குமாரியைத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணமாகி 4 நாட்களிலேயே சஞ்சு குமாரி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. பதறியடித்து ஓடிய பெற்றோர் அங்கு செல்வதற்கு முன்பே, வினோத்தின் குடும்பத்தினர் சஞ்சு குமாரியின் உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்துவிட்டுத் தலைமறைவாகினர்.

உயிரிழப்பதற்கு முன் தனது சகோதரரிடம் பேசிய சஞ்சு குமாரியிடமிருந்து செல்போனைப் பிடுங்கிய மாமியார், “உன் சகோதரி சடலமாகத்தான் வீட்டை விட்டு வெளியே போவாள்” என்று மிரட்டியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வரதட்சணைப் பேய்க்குப் பலியான மகளின் மரணத்திற்கு நீதி கேட்டுப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவான வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.