தமிழகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ஜவுளித் துறையைச் சூழ்ந்துள்ள கடும் நெருக்கடியைக் களையக் கோரி, முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பருத்தி விலை 25 சதவீதம் வரை எகிறியுள்ள நிலையில், இதனால் நூல் விலையும் உயர்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, ஊரகப் பெண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், உலகளாவிய சந்தையில் இந்திய ஜவுளித் துறை போட்டித்தன்மையுடன் நீடிக்கவும் பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பு தரும் இந்தத் துறையைக் காப்பது அரசின் கடமை” எனத் தனது கடிதத்தில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ள முதலமைச்சர், மூலப்பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
