உத்தரப் பிரதேச மாநிலத்தில், மணமகன் வீட்டார் கொடுத்த திருமணச் சேலை தரம் குறைவாக இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் கோண்ட் என்பவரது மகள் நிகிக்கும், விஷால் கோண்ட் என்பவருக்கும் கெய்காட் கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.
சடங்குகளின் போது மணமகன் வீட்டார் கொடுத்த சேலை பிடிக்காததால், அதனை உடுத்த மணமகள் மறுத்ததோடு திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார். இந்தச் சிறிய விவகாரம் இருகுடும்பத்தாருக்கும் இடையே பெரிய மோதலாக உருவெடுத்தது. இதில் மணமகளின் சகோதரர் மற்றும் தாய் உட்பட மூவர் காயமடைந்தனர்.
இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணமகன் விஷால் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 10 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சாதாரணச் சேலை விவகாரம் கல்யாணம் நின்று போகும் அளவிற்குச் சென்றது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
