கேரள சட்டமன்றத் தேர்தலில் 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கூட்டணியில், முதலமைச்சர் யார் என்பதில் கடந்த 9 நாட்களாகக் கடும் குழப்பம் நீடிக்கிறது. கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூவருக்கும் இடையே நிலவும் அதிகாரப் போட்டியால் கட்சித் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, கே.சி.வேணுகோபாலுக்கு முதலமைச்சர் பதவி வழங்க மேலிடம் முயல்வதாகக் கருதி, கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு எதிராகத் தொண்டர்கள் எச்சரிக்கை பேனர்களை வைத்துள்ளனர்.

“தேர்தல் வெற்றிக்காக மட்டும் வயநாட்டிற்கு வர வேண்டாம்” என்றும், கே.சி.வேணுகோபாலைத் தேர்வு செய்தால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அந்த பேனர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் கருத்துகளைக் கேட்டறிந்த மேலிடம், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மூலம் இறுதி முடிவை அறிவிக்கத் தாமதப்படுத்துவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வீடி சதீஷன் தற்போது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.