தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரசாரம் செய்தபோதிலும், கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரால் கூட வெற்றி பெற முடியவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை உயர்த்தி இரண்டாம் இடத்தைப் பிடித்த பா.ஜ.க., இந்தத் தேர்தலில் வாக்குகளைப் பெருமளவில் இழந்திருப்பது அக்கட்சியின் தேசிய தலைமையைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கடுமையான தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழு ஒன்றை அமைக்க பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.
இக்குழு தொகுதி வாரியாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை டெல்லிக்கு அனுப்ப உள்ளது. இதற்கிடையே, தோல்விக்குப்பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இத்தகைய ஆய்வுகளும் மாற்றங்களும் அவசியம் என கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க-வில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
