அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தரும் மத்தியஸ்தராக பாகிஸ்தானை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்திருந்தார். ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் அமெரிக்காவையே ஏமாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானியப் போர் விமானங்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, பாகிஸ்தான் தனது ராணுவத் தளங்களில் ரகசியமாக மறைத்து வைத்திருப்பதைச் செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லாமல் குவாதர் துறைமுகம் வழியாக ஈரான் தனது பொருட்களை அனுப்பவும் பாகிஸ்தான் உடன்பாடு கண்டுள்ளது.
இது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பிடியைத் தளர்த்தும் ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. மறுபுறம், சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கியுடன் இணைந்து ‘இஸ்லாமிய நேட்டோ’ என்ற புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேலின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், மத்திய கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த அமைப்பு தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சவூதி அரேபியாவுக்கு அணுசக்தி பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கப் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்குப் பதிலாக, கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், அந்த நாடுகளிடமிருந்து 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் உதவிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பைச் சார்ந்திருந்த நாடுகள் தற்போது பாகிஸ்தான் பக்கம் திரும்புவது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
