தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்த இந்தியப் பெண் ஒருவர், லாவோஸ் விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அன்னபூர்ணா என்ற அந்தப் பயணி, லாவோஸில் இருந்து கம்போடியா செல்ல முயன்றபோது, தன்னிடம் முறையான ஆவணங்கள் மற்றும் வங்கி இருப்புகள் இருந்தும் வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தன்னை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சுற்றுலாப் பயணி என்பதை நிரூபிக்க சுமார் 400 டாலர் ரொக்கப் பணத்தைக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாகவும், முந்தைய பயண வரலாறுகள் அல்லது டிஜிட்டல் வங்கி ஆதாரங்களை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
விதிமுறைகளுக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தைக் கேட்டபோது, ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மெசஞ்சர் குரூப் சாட் ஒன்றைக் காட்டியது தன்னை மேலும் அதிர்ச்சியடையச் செய்ததாக அந்தப் பெண் வீடியோவில் கூறியுள்ளார்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இத்தகைய பாகுபாடுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், ஐரோப்பியர்களுக்குக் கிடைக்கும் மரியாதை இந்தியர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்; சிலர் இதே போன்ற அனுபவங்கள் தங்களுக்கும் நேர்ந்ததாகக் கூறினாலும், வேறு சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக ரொக்கப் பணம் மற்றும் கூடுதல் ஆவணங்களை வைத்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
