மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதை நினைத்து பயந்தாரோ அதுவே நடப்பது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான 90 சதவீத யுரேனியம் செறிவூட்டலை உடனடியாகத் தொடங்கப் போவதாக அந்த நாடு பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஈரானிடம் 11,000 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதோடு, அதில் ஒரு பகுதி ஏற்கனவே 60 சதவீத ஆபத்தான அளவை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் இந்த ‘அணு ஆயுதக் கணக்கு’ வாஷிங்டன் முதல் இஸ்ரேல் வரை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரான் மீதான தனது கடும் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி மையங்களை அழித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இந்த மோதல் உலகையே ஒரு பெரும் போருக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.