அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள கொறடாவின் உத்தரவை மீறும் எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகும் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை எச்சரித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா அளிக்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அணியினர் தங்களுக்கு என்று தனியாக ஒரு கொறடாவை நியமிக்க முடியாது என்றும், அது சட்டப்படி செல்லாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள இன்பதுரை, ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை மட்டுமே கொறடாவை நியமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் நியமித்துள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி எடுக்கும் முடிவுகளே சட்டபூர்வமானது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறிச் செயல்படும் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்பதே தற்போதைய சட்ட நிலை என்று அவர் எச்சரித்துள்ளார்.
