புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். முருகேசன் என்பவருக்கும், எம்.எஸ்சி. பட்டதாரியான ஆஷா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஆஷா வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக முருகேசன் கூறிவந்த நிலையில், ஆஷாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், முருகேசன் தனது மனைவியை அடித்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. சம்பவத்தன்று தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், முருகேசன் ஆஷாவை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் தலை சுவரில் மோதி ஆஷா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலையை மறைக்கத் திட்டமிட்ட முருகேசன், ஆஷா உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார். உண்மையை ஒப்புக்கொண்ட முருகேசனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
