கோவை சேர்ந்த ராம்குமார் – நர்மதா தம்பதியின் 17 வயது மகள் யாழினி, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தான் எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைவாக இருந்ததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இது குறித்து தனது தாயிடம் கூறி அழுது வருத்தப்பட்ட யாழினிக்கு, அவரது பெற்றோர் ஆறுதல் கூறி தேற்றியுள்ளனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி யாழினி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதிப்பெண் குறைந்த வருத்தத்தில் மாணவி எடுத்த இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.