தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்தச் சந்திப்பின் போது, திமுக இளைஞரணி செயலாளரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75’ என்ற புத்தகத்தை முதல்வர் விஜய்க்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தேர்தல் களத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் போது காட்டும் இந்த அரசியல் நாகரிகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கருப்பு சிவப்பு வண்ணங்களில் உருவான திமுக-வின் 75 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை விஜய் புன்னகையோடு பெற்றுக்கொண்டார்.

ஏற்கனவே திமுக தரப்பில் இருந்து விஜய்க்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், ஆழ்வார்பேட்டையில் நடந்த இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.